நலங்கு வைத்தல்
பாய் விரித்து விட்டு, பெண் சென்று மாப்பிள்ளையை வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்து வர வேண்டும். பின் உட்கார வைத்து சந்தனம் பூசி, பொட்டு வைத்து, வலது காலை எடுத்து நலங்கிட வேண்டும். பின் இடது காலுக்கும் வைக்கவும்
நலங்கு வைத்ததும், சந்தனம் வைத்து மாப்பிள்ளையை சீப்பு வைத்து தலை வாரி, கண்ணாடியைப் பார்க்க சொல்லவும். பின் மஞ்சள் தடவிய தேங்காய் உருட்டி விளையாடவும். தேங்காயை ஒரு கையால் அமுக்கி பிடித்து பெண்ணை எடுக்க சொல்லவும். பின் பித்தளை தேங்காயை இருவரும் உருட்டி ஒன்றோடு ஒன்று மோதாமல் விளையாடவும். பின் அப்பளத்தை மாப்பிள்ளையின் தலையை 3 சுற்று இடமிருந்து வலமாக சுற்றி தலை மேல் நொறுக்க வேண்டும். 3 முறை அப்பளத்தை நொறுக்கவும்.
இதே மாதிரி பெண்ணுக்கு மாப்பிள்ளை நலங்கு வைத்து, சந்தனம் பூசி, பொட்டு வைத்து சீப்பு எடுத்து வாரி, கண்ணாடி பார்க்கவும். தேங்காய் உருட்டி, அப்பளத்தையும் சுற்றி (3 முறை) தட்டி நொறுக்கவும். பெண்ணையும், மாப்பிள்ளையையும் அமரச் செய்து, குழந்தை பொம்மையை தொட்டியில் போட்டு, நீர் போன மாதிரி பாவனை செய்து, குழந்தையை எடுத்து, மாப்பிள்ளையை மடியில் கொடுத்து வைக்கவும். பின் நான் ஆபீஸ் போகணும், குழந்தையைப் பிடி என்று பெண்ணிடம் கொடுத்து, சங்கில் பால் ஊற்றுவது மாதிரி செய்யவும். பிறகு நான் சமைக்க போகணும் என்று தொட்டியில் போட்டு இருவரும் ஆட்டி விளையாடவும். பின் இருவருக்கும் ஆரத்தி எடுத்து பால், பழம் தரணும்.
சாந்தி சீர் வைத்து முடித்தவுடன் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் 4 வகை சாதம் (மஞ்சள், வெள்ளை, சிவப்பு, கருப்பு) உருட்டி திருஷ்டி சுற்றவும். 11, 9, 7, 5 பேருக்கு இரு வீட்டாரும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் 5 அல்லது 2 வைத்து சுமங்கலிக்கு கொடுக்கவும்.
மறு நாள் நாத்தனார் வாசற்படி மெழுக, நாத்தனார்க்கு குங்கும கூடு வெற்றிலை பாக்கு, மஞ்சள், ரூபாய் வைத்து கொடுக்கவும்.
மாப்பிள்ளை வீட்டார் மஹாலுக்கு வந்ததிலிருந்து ஊருக்கு செல்லும் வரை ஒவ்வொரு நேரமும் பூ தர வேண்டும்.