விளக்கு வைத்து, மஞ்சள் பிள்ளையார் வைக்கவும். பெண்ணுக்கு புதுப்புடவை கட்டி, கோலத்தில் அமர்த்தி, மாலை போட்டு, பால் சாதம், வாழைப்பழம் வைத்து பின் பாலும், பழமும் கொடுத்து, ஆரத்தி எடுத்து, விபூதி, பெரியவர்கள் பூசி, சாமி கும்பிட்டு, பேழைச் சாமானை வெள்ளி சட்டியில் வைத்து கிளம்பவும். தாய்மாமா, மனைவி அழைத்துச் செல்லவும். பக்கத்தில் கோவில் இருந்தால் விடலை போடவும். இல்லை என்றால் வாசலில் போட்டு விட்டு கிளம்பவும்.
இதே மாதிரி மாப்பிள்ளையும் கோடி வேஷ்டி உடுத்தி, கோலத்தில் பால் சாதம், பாலும், பழமும் கொடுத்து, விபூதி பூசி, ஆசீர்வாதம் செய்து சாமி கும்பிட்டு கிளம்பவும்.
மாப்பிள்ளை வீட்டார் வரும் முன் பெண்ணை அழைத்து வந்து விடவும். மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்துச் சென்று பால், பழம் கொடுக்கவும்.
மாப்பிள்ளை வீட்டாருக்கு சாயந்திரம் பூ கொடுத்து விட்டு, 1 வெள்ளி கூடு, 10 பேன்ஸி கூடு, 11 மஞ்சள் கிழங்கு, பத்திரிக்கை, வெற்றிலை, பாக்கு வைத்து தரவும்.
தேங்காய் எத்தனை வைக்கிறோமோ, அதே மாதிரி கூடு வைக்கவும்.
மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன் ஒரு குடம் தண்ணீர், 3 டம்ளர், தாம்பாளத்தில் மஞ்சள் உருண்டை, குங்குமம், சந்தனம், பூ வைத்து சம்பந்திகளை வரவேற்கவும், பின் எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்து, சிறிது நேரத்திற்கு பின்னர் ஜுஸ் கொடுக்கவும்.
பின்னர் ஒரு தாம்பாளம் அல்லது ட்ரேயில் மாப்பிள்ளைக்கு சோப், சீப்பு, கண்ணாடி, பவுடர், டர்கி டவல், பவுடர், கிரீம், தேங்காய் எண்ணெய் கொடுக்கவும்.
தேங்காய் எண்ணெய் பாட்டில் (அ) சாஷே பாக்கெட், எண்ணெய் 10 பாக்கெட், சோப் 3, பவுடர் 2, சிங்கார் சாந்து, குங்குமம், மை டப்பா, சீப்பு 6, ஸ்டிக்கர் பொட்டு அட்டை, டவல் 2 கொடுக்கவும்.
அதன் பின் நல்லெண்ணெய், 200 கிராம் சீயக்காய்பொடி, மஞ்சள் பொடி, ஷாம்பு ஷாஷே 10, எல்லாம் சம்பந்தி அம்மாளிடம் கொடுக்கவும்.